Homeதிரைவிமர்சனம்ஏலியன் எப்படி? அயலான் திரை விமர்சனம்

ஏலியன் எப்படி? அயலான் திரை விமர்சனம்

Ayalaan Movie Review In Tamil : இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது அயலான்.

இந்தத் திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதை முடிப்பதில் படக்குழு பல சிரமங்களைச் சந்தித்து வந்தது. எனினும், அதைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்து திரைக்குக் கொண்டு வந்திருக்கும் படக் குழுவைப் பாராட்டியாக வேண்டும்.

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு சிதறிய அதிசக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்து உலகின் மிகப் பெரிய எரிசக்தி உற்பத்தி மூலமாக மாற நினைக்கும் வில்லனிடமிருந்து அந்த சக்திவாய்ந்த பொருளைத் தேடி பூமிக்கு வருகிறது ஏலியன். அதை மீண்டும் ஏலியன் கொண்டு சென்றதா இல்லையா? அதற்கு சிவ கார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என்பதே அயலான் திரைப்படத்தின் கதை.

ஏலியன் தொடர்பான கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஏலியன்களை ஹாலிவுட் படங்கள்தான் அறிமுகம் செய்தன எனலாம்.

அயலான் திரை விமர்சனம்

Ayalaan Movie Review In Tamil

ஆனால் தமிழில் அத்தகைய படங்களின் எண்ணிக்கையும், அதற்கான முயற்சியும் ஒப்பீட்டளவில் குறைவு. அதை உருவாக்கும் பொருள் செலவும், அதற்கான முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். தமிழிலும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடியும் என சொல்லி நீண்ட காத்திருப்புக்குப் பின் அதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறது அயலான் படக்குழு.

நாம் யூகிக்கக் கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு செல்வது அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும் அதன் பின் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம்.

6 ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்புச் சாயல் படத்தில் தெரிகிறது. ஆக்-ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

மாவீரன் படத்தை நினைவுபடுத்துகிறதா அயலான்? படம் எப்படி இருக்கு தெரியுமா?

ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவர் இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். சில காட்சிகளில் வருகிறார். பின், திடீரென காணாமல் போகிறார்.

காட்சிகளுக்கு இடையிலான தொடர்ச்சியில் அவரைக் காண முடியவில்லை. தவிர கருணாகரன், யோகிபாபு, பாலா சரவணன், பானுப்ரியா என பலர் நடித்துள்ளனர். ஏலியனுடன் இவர்கள் அடிக்கும் லூட்டி கலகலப்புக்கான வாய்ப்பு.

முழுக்கவும் கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி படக்குழு இறங்கியிருப்பதை கான முடிகிறது. அதற்கே தகுந்த உழைப்பைச் சரியாகக் கொடுத்திருக்கிறது கிராபிக்ஸ் குழு. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு.

ஏலியனை முகபாவனைகள் உடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருக்கின்றனர்.

ரஹ்மானின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல். பாடல்களில் ரஹ்மானின் இசை எந்திரனின் சாயலைக் கொண்டிருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. டாட்டூ எனும் பெயரில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.

பழக்கப்பட்ட ஒன்று என்றாலும் குழந்தைகளைக் கவரும் வகையில் இருக்கிறது சித்தார்த்தின் குரல். பொதுவாக சினிமாவில் உலகத்தை அழிப்பதற்காகத் தான் ஏலியன்கள் வரும்.

ஆனால் இந்தப் படத்தில் வித்தியாசமாக பூமியை அழிக்க நினைக்கும் மனிதனைத் தடுக்க ஏலியன் வருவது சிறப்பான யோசனை. மனிதர்களின் சுயநலம் ஆங்காங்கே கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது யதார்த்தத்தை காட்டுகிறது. தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவால் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

திரைக்கதை, முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி இழுவையாக இருப்பது படத்தின் பலவீனம். ஏற்கெனவே நிறுவிய காட்சிகளை மீண்டும் மீண்டும் திரையில் காட்டியிருப்பது ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையேயான உள்ளே – வெளியே ஆட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக காட்டியிருக்கலாம்.

இந்தப் பொங்கல் பண்டிகையை ஏமாற்றாமல் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான படமாக அயலானை கட்டாயம் ரசிக்கலாம்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை

Ayalaan Movie Review In Tamil : இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது அயலான். இந்தத் திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதை முடிப்பதில் படக்குழு பல சிரமங்களைச் சந்தித்து வந்தது. எனினும், அதைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்து திரைக்குக்...ஏலியன் எப்படி? அயலான் திரை விமர்சனம்